உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் வரை, ரஷ்யா (Russia) மற்றும் பெலாரஸ் (Belarus) நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கனடாவிற்குள் நுழைந்து போட்டியிடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை இராஜாங்கச் செயலாளர் ஆடம் வான் கோவர்டன் (Adam van Koeverden) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஐஸ் ஹொக்கி சம்மேளனம் (IIHF) ரஷ்யாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்த நிலையில், கனடாவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இதேவேளை, ரஷ்ய அணியுடன் விளையாட மாட்டோம் என பின்லாந்து (Finland), சுவீடன் (Sweden), செக்கியா (Czechia) மற்றும் நோர்வே (Norway) ஆகிய நாடுகளின் ஹொக்கி சம்மேளனங்களும் ஏற்கனவே அறிவித்துள்ளன.
நடுநிலை என்ற பெயரில் தனிப்பட்ட வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டாலும், ஒரு அணியாகப் பங்கேற்க முடியாது என வான் கோவர்டன் (Van Koeverden) தெளிவுபடுத்தியுள்ளார்.
போர் தொடரும் வரை கனடாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் மார்க் கார்னியும் (Mark Carney) முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உலக இளையோர் சாம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் டிசம்பர் 26-ஆம் திகதி எட்மன்டன் (Edmonton) மற்றும் ரெட் டீர் (Red Deer) ஆகிய நகரங்களில் ஆரம்பமாகவுள்ளது.
