சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிரான கூட்டு விசாரணையின் ஒரு பகுதியாக, அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த கனடாவின் மேற்கு வான்கூவரை (West Vancouver) சேர்ந்த கரின்தர் தியோ (Garinder Deo) என்பவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மூன்று முக்கிய குற்றக் கும்பல்களின் போதைப்பொருள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய நெட்வொர்க்கை அமெரிக்க அதிகாரிகள் முடக்கிய அடுத்த நாளே, ஜூலை 7ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து கனடா மற்றும் கிழக்கு அமெரிக்காவிற்கு கடத்துவதற்காக கரின்தர் தியோ (Garinder Deo) கொக்கைன் மற்றும் ஹெராயின் ஆகிய போதைப்பொருட்களை வாங்கியதாக எப்.பி.ஐ (FBI) குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரான்ஸ் காவலில் உள்ள இவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இந்தியாவில் சிறையிலுள்ள குற்றவாளி லேரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) மற்றும் அவரது நண்பர் ஆகியோரே 2023 ஜூன் மாதம் சர்ரேயில் (Surrey) நிஜ்ஜார் (Nijjar) படுகொலையை திட்டமிட்டு நடத்தியதாக அமெரிக்க நீதித்துறை இந்த வார தொடக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
