ஸ்கார்பாரோ வீதி மறுசீரமைப்பு: ‘ஆபத்தான’ வாகனம் ஓட்டுவதாக மக்கள் கவலை!

கனடாவின் (Canada) டொராண்டோவில் (Toronto) அமைந்துள்ள ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில், பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட வீதி மறுசீரமைப்புக்குப் பின்னர் ‘ஆபத்தான’ முறையில் வாகனங்கள் செலுத்தப்படுவதாக பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Ellesmere Road மற்றும் Lawrence Avenue East இடையிலான Scarborough Golf Club Road வீதியில், சுமார் 13 மில்லியன் டொலர் செலவில் 4 பாதைகள் கொண்ட வீதியானது 2 பாதைகளாகக் குறைக்கப்பட்டு, புதிய மிதிவண்டி பாதைகள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சந்திகளில் வைக்கப்பட்டுள்ள கொன்கிரீட் தடுப்புகள் (Concrete Medians) காரணமாக வாகன ஓட்டிகள் திருப்பங்களைச் சரியாக செய்ய முடியாமல் நடுப் பாதைக்கு வருவதாகவும், அவசர கால வாகனங்கள் செல்வதற்குப் பாதையை ஒதுக்கித் தருவது கடினமாக உள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் Karen Izumi என்பவர் கவலை தெரிவித்துள்ளார்.

நகர சபை உறுப்பினர் Paul Ainslie இது குறித்துத் தெரிவிக்கையில், திட்ட ஆலோசனைக்காக 12,000-க்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்கள் அனுப்பப்பட்டபோதிலும், வெறும் 80 நபர்களின் கருத்துக்களின் அடிப்படையில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனால் அவசர கால சேவைகள் மற்றும் பனி அகற்றும் பணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், 2010 முதல் 2021 வரை இப்பகுதியில் 15 பேர் படுகாயமடைந்தும் அல்லது உயிரிழந்தும் உள்ளதால், வாகனங்களின் வேகத்தைக் குறைத்து பாதுகாப்பை உறுதிசெய்யவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக City of Toronto அதிகாரி Kayla Lewis தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles