றொரண்டோ (Toronto) நகரில் இந்த ஆண்டின் முதலாவது கடுமையான வெப்ப காலநிலை நீடித்து வருவதால், பொதுமக்களுக்கு மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கை (Heat warning, yellow alert) விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு வரை நீடிக்கும் இந்த அனல் காற்றில், பகல் நேர வெப்பநிலை 29 பாகை செல்சியஸாக (29 C) பதிவாகினாலும், காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக அது 36 பாகை செல்சியஸ் (36 C) போல உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிதீவிர வெப்பம் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்பதால், ஏரிக் கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள், தனியாக வசிப்பவர்கள் போன்ற ஆபத்தில் இருக்கும் நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் நலம் விசாரிக்குமாறு கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் (Environment Canada) அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், புதன்கிழமை முதல் இந்த கடுமையான வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை 18 பாகை செல்சியஸாகவும் (18 C), வியாழக்கிழமை 16 பாகை செல்சியஸாகவும் (16 C) குறையும் வெப்பநிலை, வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் முறையே 15 பாகை (15 C) மற்றும் 13 பாகை செல்சியஸ் (13 C) வரை மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.










