பிராம்ப்டனில் தொடர் தீவைப்பு – ஒரே இரவில் 4 இழுவை வாகனங்கள் எரிப்பு!

பிராம்ப்டனில் (Brampton) செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று வெவ்வேறு இடங்களில் நான்கு இழுவை வாகனங்கள் (Tow trucks) தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.​

அதிகாலை 1:14 மணியளவில் விமான நிலைய வீதி (Airport Road) மற்றும் கன்ட்ரிசைட் டிரைவ் (Countryside Drive) அருகே உள்ள 7 Cassinway Road இல் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.​

1:31 மணியளவில் போவெய்ர்ட் டிரைவ் வெஸ்ட் (Bovaird Drive West) மற்றும் மெக்லாலின் வீதி (McLaughlin Road) அருகே உள்ள Legend Lane இல் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனம் தீக்கிரையானது.

1:40 மணியளவில் அதே பகுதியில் உள்ள Worthington Avenue இல் நான்காவது வாகனம் தீப்பற்றி எரிந்தது.

இந்தத் தீவிபத்துகளில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், தீ அருகில் உள்ள வீடுகளுக்குப் பரவாமல் தீயணைப்புப் படையினரால் அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீப்பரவல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவைப்புச் சம்பவங்கள் (Arson) எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான தகவல்கள் அல்லது சிசிடிவி/டாஷ் கெம் (Dash cam) காட்சிகளை வைத்திருப்பவர்கள் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

 

Related Articles

Latest Articles