பச்சை குத்துவதால் பார்வை இழப்பு அபாயம் – கனடியர்களை எச்சரிக்கை!

பச்சை குத்துதல் (Tattoo) மற்றும் கண் பார்வை பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருக்கலாம் என அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு கனடாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

‘டாட்டூ தொடர்பான யுவைடிஸ்’ (Tattoo-associated uveitis) எனப்படும் இந்த அரிதான நிலையில், உடலில் உள்ள பச்சை குத்தப்பட்ட இடங்கள் வீக்கமடைவதோடு, கண்களின் நடுப்பகுதியிலும் (Uvea) அழற்சி ஏற்பட்டு பார்வைத் திறன் பாதிக்கப்படுகிறது.

ஒஷாவாவைச் சேர்ந்த எலிஷா தாம்சன் (Elisha Thompson) மற்றும் தண்டர் பே பகுதியைச் சேர்ந்த ஜக்கரி ஆடம்ஸ்கோவ்ஸ்கி-சிசன்ஸ் (Zachery Adamkowski-Sissons) ஆகியோர் இப்பாதிப்பால் ஒரு கண்ணின் பார்வையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இழந்துள்ளனர்.

பச்சை குத்திய இடங்கள் தடித்தல், அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படுதல், அதே நேரத்தில் கண்களில் சிவப்பு நிறம், வலி, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை மற்றும் மங்கலான பார்வை தோன்றுதல் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தி தென்படுமென ஆய்வில் கூறப்படுகிறது.

டாட்டூ மை (Ink) சிலரது நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி, அதனை ஒரு அந்நியப் பொருளாகக் கருதித் தாக்கத் தொடங்குகிறது. இந்தத் தாக்குதல் கண்களையும் பாதிப்பதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

இந்த நிலை மிகவும் அரிதானது என்பதால் பச்சை குத்திய அனைவரும் அச்சப்படத் தேவையில்லை.

ஆனால், டாட்டூ செய்த இடத்தில் வீக்கம் மற்றும் கண் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.

தரம் குறைந்த மைகளில் உள்ள உலோகங்கள் மற்றும் இரசாயனங்கள் இப்பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், புகழ்பெற்ற கலைஞர்களிடம் தரமான மையைப் பயன்படுத்தி பச்சை குத்துமாறு மருத்துவர் நுபுரா பக்ஷி (Dr. Nupura Bakshi) அறிவுறுத்தியுள்ளார்.

கனடாவில் சுமார் 13 மில்லியன் மக்கள் டாட்டூ வைத்துள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக தரவுகளைச் சேகரிக்க கனடிய கண் மருத்துவ சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles