தங்க முலாம் பூசப்பட்ட ட்ரம்ப் சிலை – இது வழிபாட்டிற்கானது அல்ல என மதபோதகர் விளக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) பிரம்மாண்டமான தங்க முலாம் பூசப்பட்ட சிலை ஒன்று மியாமியில் (Miami) உள்ள அவரது கோல்ப் மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

4.6 மீற்றர் உயரமுள்ள இந்த வெண்கலச் சிலை, தங்க முலாம் பூசப்பட்டது.

2024 ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய பிறகு, ட்ரம்ப் தனது கையை உயர்த்தி சைகை காட்டும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலைக்கு அர்ப்பணிப்புச் சடங்கு செய்த மதபோதகர் மார்க் பேர்ன்ஸ் (Mark Burns), இது வழிபாட்டிற்கான “தங்கக் கன்று” (Golden calf) அல்ல என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இது வழிபாடு அல்ல, மாறாக கௌரவம் மற்றும் தேசப்பற்றின் அடையாளம் மட்டுமே என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கிரிப்டோகரன்சி தொழில்முனைவோர் மற்றும் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் 6,000-க்கும் மேற்பட்டோரின் நிதியுதவியுடன் இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் மீதான தாக்குதல்களில் அவர் உயிர் தப்பியதை இறைவனின் தலையீடாகக் கருதுவதாகத் தெரிவித்த மார்க் பேர்ன்ஸ், அவரைக் காப்பாற்றியதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பல மாதக் காத்திருப்புக்குப் பிறகு இதற்கான முழுத் தொகையும் இரண்டு வாரங்களுக்கு முன்பு தமக்குக் கிடைத்ததாகவும், அதன் பின்னரே இச்சிலை நிறுவப்பட்டதாகவும் இதை உருவாக்கிய கலைஞர் ஆலன் கோட்ரில் (Alan Cottrill) தெரிவித்துள்ளார்.

இந்தச் சிலை ட்ரம்ப் ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அதேவேளை, மத ரீதியான விமர்சனங்களையும் சமூக வலைத்தளங்களில் கிளப்பியுள்ளது.

Related Articles

Latest Articles