கனடியப் பல்கலைக்கழகங்கள் மீது சைபர் தாக்குதல் – உலகளவில் 9,000 கல்வி நிறுவனங்களுக்கு பாதிப்பு!

கனடியப் பல்கலைக்கழகங்களில் இறுதிப் பரீட்சைகள் நெருங்கி வருகின்றன.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்தும் Canvas கற்றல் முகாமைத்துவக்  கட்டமைப்பு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி முடங்கியுள்ளது.

ShinyHunters என்ற ஹேக்கர் குழு, Canvas கட்டமைப்பின் தாய் நிறுவனமான Instructure மீது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் உலகளவில் சுமார் 9,000 கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

டொராண்டோ பல்கலைக்கழகம் (University of Toronto) மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் (UBC) ஆகியன தமது கற்றல் கட்டமைப்புகள் மறு அறிவித்தல் வரை இயங்காது என அறிவித்துள்ளன.

UBC தனது மாணவர்களை உடனடியாகக் கடவுச்சொற்களை (Passwords) மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பில்லியன் கணக்கான தனிப்பட்ட செய்திகள் மற்றும் மாணவர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ஹேக்கர்கள் உரிமை கோரியுள்ளனர்.

பணயத்தொகை வழங்காவிடில் மே 12 ஆம் திகதிக்குள் தரவுகளைப் பகிரங்கப்படுத்தப் போவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர்.

தரங்கள் (Grades), பாடக் குறிப்புகள், ஒப்படைப்புகள் மற்றும் விரிவுரை வீடியோக்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்தக் கட்டமைப்பு முடங்கியுள்ளதால், இறுதிப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஹார்வர்ட் (Harvard) பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஸ்போகேன் (Spokane) பாடசாலை மாவட்டங்கள் உட்படப் பல சர்வதேச நிறுவனங்களும் இந்தப் பாதிப்பை உறுதிப்படுத்தியுள்ளன.

கல்வித் துறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சைபர் தாக்குதல்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாரிய சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளன.

அதிகாரிகள் இதனைத் தணிக்கத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

Related Articles

Latest Articles