வரவிருக்கும் விடுமுறை கால பண்டிகை நெருங்கி வரும் வேளையில், கனடா போஸ்ட் (Canada Post) நிறுவனத்தின் சில்லறை அஞ்சல் நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உள்நாட்டு அஞ்சல் மற்றும் பார்சல் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இத்தொழில்நுட்பப் பிரச்சனை ஆரம்பமாகியுள்ளதாகவும், இது பிரதானமாக டொராண்டோ (Toronto), ஒட்டாவா (Ottawa) மற்றும் மொண்ட்ரியால் (Montreal) ஆகிய பகுதிகளை இணைக்கும் தபால் குறியீட்டு மண்டலங்களிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கனடா போஸ்ட் தெரிவிக்கிறது.
எனினும், இணையவழி மூலம் உருவாக்கப்படும் பார்சல்கள் மற்றும் அமெரிக்கா அல்லது ஏனைய சர்வதேச நாடுகளுக்கான அஞ்சல் சேவைகளுக்கு இக்கோளாறால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையை விரைவாகச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதுவரை ‘கனடா போஸ்ட் பிளாட் ரேட் பாக்ஸ்கள்’ (Canada Post Flat Rate Boxes) போன்ற முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்பட்ட பெட்டிகளைப் பயன்படுத்தி சேவைகளைப் பெற முடியும் என்றும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெனீவ் ஜோலி (Genevieve Joly) தெரிவித்துள்ளார்.
இக்கோளாறு எப்போது முழுமையாக சீரமைக்கப்படும் என்பதற்கான காலக்கெடு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
