ஒன்ராறியோவின் பிரான்ட்போர்ட் (Brantford) நகரில், 1963 ஆம் ஆண்டு மூன்று வயது சிறுவன் மர்மமான முறையில் காணாமல் போன வழக்கு பல தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் 23, 1963 அன்று, மூன்று வயது சிறுவனான ஜிம்மி பேஜ் (Jimmy Paige), தனது அண்ணன் மற்றும் நண்பருடன் ஸ்பிரிங் ஸ்ட்ரீட் (Spring Street) பகுதியில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானான்.
அன்று 200-க்கும் மேற்பட்டோர் இணைந்து தேடியும் சிறுவனைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
ஆனால், ஜிம்மியின் விளையாட்டு இயந்திரத்தை (Toy tractor) வேறொரு சிறுவன் வைத்திருந்தது மட்டும் கண்டறியப்பட்டது.
சிறுவன் அருகில் உள்ள கிராண்ட் ரிவர் (Grand River) ஆற்றில் விழுந்திருக்கலாம் என அப்போது பொலிஸார் கருதினர்.
ஆனால், “ஆறு எப்போதும் உடலைத் திருப்பித் தரும், ஜிம்மி ஆற்றுக்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை” என அவனது சகோதரர் மைக்கேல் பேஜ் (Michael Paige) இன்றும் நம்புகிறார்.
தற்போது பிரான்ட்போர்ட் பொலிஸாரின் முக்கிய குற்றப்பிரிவு, தேசிய காணாமல் போனோர் மையத்துடன் இணைந்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
ஜிம்மியின் குடும்பத்தினர் தமது DNA மாதிரிகளைத் தேசிய தரவுத்தளத்திற்கு வழங்கியுள்ளனர்.
இதன் மூலம் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத இந்த மர்மத்திற்கு விடை கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
“யாரோ ஒருவருக்கு உண்மை தெரிந்திருக்கும்” என ஏங்கும் ஜிம்மியின் குடும்பத்தினர், 60 ஆண்டுகால இந்தத் துயரத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
