கனடாவில் கடந்த மார்ச் மாதத்தில் பூஜ்ஜிய-உமிழ்வு வாகனங்களின் (ZEV) விற்பனை முன்னெப்போதும் இல்லாத வகையில் 74.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக கனடா புள்ளிவிபரத் திணைக்களம் (Statistics Canada) தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 21,574 புதிய மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது மொத்த வாகன விற்பனையில் 12.2 சதவீதமாகும். 2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது ஒரு பாரிய வளர்ச்சியாகும்.
அதிகரித்து வரும் பெற்றோல் விலை மற்றும் மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள $5,000 வரையிலான ஊக்கத்தொகை (Rebates) ஆகியவையே மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி நகர முதன்மைக் காரணங்களாக உள்ளன.
கனடிய வாகன விற்பனையாளர்கள் சங்கத்தின் (CADA) ஊவ் வில்லியம்ஸ் (Huw Williams) கூறுகையில், எரிபொருள் விலையேற்றம் மற்றும் சுற்றுப்புறத்தவர்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதைக் கண்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளதே இந்த மாற்றத்திற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
ஹொண்டா தனது திட்டத்தை நிறுத்தியுள்ள போதிலும், செயின்ட் தோமஸ் (St. Thomas) பகுதியில் வோக்ஸ்வாகன் (Volkswagen) நிறுவனத்தின் மின்கல தொழிற்சாலை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
மேலும், சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யவும் கனடா கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.
வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான நிலையங்கள் (Charging stations) போதுமான அளவில் மற்றும் நம்பகத்தன்மையுடன் கிடைக்குமா என்ற அச்சம் நுகர்வோர் மத்தியில் இன்னும் ஒரு தடையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, சாதாரண பயணிகள் கார்கள் மற்றும் டிரக் வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சரிவைச் சந்தித்துள்ளது.










