கனடாவின் வான்கூவர் (Vancouver) மற்றும் மெட்ரோ வான்கூவர் (Metro Vancouver) பகுதிகளில் வசந்த காலத்தை முன்னிட்டு பல மில்லியன் டியூலிப் (Tulip) மலர்கள் பூத்துக் குலுங்கும் மலர் திருவிழாக்கள் இந்த மாதம் கோலாகலமாகத் தொடங்கவுள்ளன.
குறிப்பாக, பிரேசர் வெளி (Fraser Valley) பகுதியில் அமைந்துள்ள அகஸிஸ் (Agassiz) நகரில், கனடாவின் மிகப்பெரிய ரியூலிப் திருவிழாவான ஹாரிசன் ரியூலிப் திருவிழா (Harrison Tulip Festival) நடைபெறவுள்ளது.
ஓனோஸ் பண்ணையில் (Onos Farms) ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்தத் திருவிழா சுமார் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும்.
45 ஏக்கர் நிலப்பரப்பில், 150-க்கும் மேற்பட்ட ரியூலிப் வகைகள் உட்பட மொத்தம் 14 மில்லியன் வசந்தகால மலர்கள் இங்கு பூத்துக் குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, போடில் (Daffodil) மற்றும் ஹைசின்த்ஸ் (Hyacinths) மலர் வகைகளையும் பார்வையாளர்கள் ரசிக்கலாம்.
இத்திருவிழாவிற்கு வருபவர்கள் புகைப்படங்கள் எடுக்கவும், மலர்களை வீட்டிற்கு வாங்கிச் செல்லவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 6:30 மணி வரையிலும், வார இறுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6:30 மணி வரையிலும் இந்தத் திருவிழா நடைபெறும்.
நுழைவுக்கட்டணம் 10 முதல் 25 டொலர்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.










