ஏரியில் மூழ்கிய சைபர்டிரக் – டெஸ்லாவின் ‘வேட் மோட்’ விபரீத சோதனை!

டெக்சாஸில் (Texas) உள்ள கிரேப்வைன் ஏரிக்குள் (Grapevine Lake) வேண்டுமென்றே செலுத்தப்பட்ட டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) வாகனம் ஒன்றை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

வாகனத்தின் நீரில் பயணிக்கும் தொழில்நுட்பமான ‘வேட் மோட்’ (Wade Mode) அம்சத்தை சோதிப்பதற்காகவே, அதன் சாரதியான ஜிம்மி ஜாக் மெக்டேனியல் (Jimmy Jack McDaniel) வாகனத்தை ஏரிக்குள் செலுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை இரவு கேட்டிஸ் வுட்ஸ் பூங்கா (Katie’s Woods Park) படகு தளத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஏரிக்குள் சென்ற சைபர்டிரக் பழுதடைந்து, அதற்குள் நீர் மூல்கியதால், சாரதியும் அவருடன் பயணித்த மற்றொருவரும் வாகனத்தை அங்கேயே கைவிட்டு தப்பியுள்ளனர்.

பின்னர் கிரேப்வைன் தீயணைப்புத்துறையின் (Grapevine Fire Department) நீர் மீட்புக்குழு உதவியுடன் வாகனம் வெளியே எடுக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்ட ஏரிப் பகுதியில் வாகனத்தை இயக்கியது மற்றும் படகுப் பதிவுப் பத்திரம் இல்லாமை போன்ற நீர் பாதுகாப்பு விதிமீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் சாரதி மெக்டேனியல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆறுகள் அல்லது ஓடைகளைக் கடக்க ‘வேட் மோட்’ உதவக்கூடும் என டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் கையேடு கூறினாலும், அதிகபட்சமாக 32 அங்குல ஆழம் வரை மட்டுமே இதில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீரினால் வாகனத்திற்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எவ்வித உத்தரவாதமும் (Warranty) வழங்கப்படாது என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

Related Articles

Latest Articles