அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கனடாவின் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்கள் குறித்துப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நாட்டு மக்களுக்கு நேரடியாக உரையாற்றினார்.
இதன்போது, டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தலைமையிலான அமெரிக்கா, தற்போது ஒரு நட்பு நாட்டை விடப் பொருளாதார ரீதியாகப் போட்டியாளராகவே செயல்படுவதாகக் கார்னி குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடனான நெருக்கமான பிணைப்பு ஒரு காலத்தில் பலமாக இருந்தது, ஆனால் தற்போது அதுவே கனடாவின் பலவீனமாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளால் (Tariffs) கனடாவின் வாகன உற்பத்தி, உலோக மற்றும் மரம் வெட்டும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதிலிருந்து மீள, அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை குறைத்து, கனடாவைத் தற்சார்பு நாடாக மாற்றும் “கனடா ஸ்ட்ராங்” (Canada Strong) திட்டத்தை அவர் முன்னிலைப்படுத்தினார்.
1812-ஆம் ஆண்டு போரில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த சர் ஐசக் ப்ரோக் (Sir Isaac Brock) போன்றோரின் மன உறுதியுடன், கனடியர்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டு இந்தப் பொருளாதார நெருக்கடியை வெல்ல வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
பிரதமரின் இந்த உரையை “வெறும் கண்துடைப்பு” என எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) விமர்சித்துள்ளார். கார்னியின் ஆட்சியின்கீழ் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வீட்டுக் கடன் மற்றும் நாட்டின் கடன் சுமை இரட்டிப்பாகியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.










